சாதித்துக் காட்டிய மு.க.ஸ்டாலின்... விமர்சனங்களைக் கடந்து வெற்றிப் பயணம்

தமிழகத்தில் திமுக கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினின் வெற்றிப் பயணத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

Update: 2021-05-03 02:52 GMT
சாதித்துக் காட்டிய மு.க.ஸ்டாலின்... விமர்சனங்களைக் கடந்து வெற்றிப் பயணம்

தமிழகத்தில் திமுக கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினின் வெற்றிப் பயணத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்... இந்தத் தேர்தலின் கதாநாயகர் ஸ்டாலின்தான் என்பதில் யாருக்குமே சந்தேகமில்லை.மிகப் பெரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தாலும் ஸ்டாலினின் அரசியல் பயணம் அத்தனை எளிதாக இருக்கவில்லை. 1989-ல் எம்.எல்.ஏ., 1996-ல் மேயர்... 2006ஆம் ஆண்டில் அமைச்சர்... 2009-ல் துணை முதல்வர் எனப் பல பொறுப்புகளை வகித்திருந்தாலும் முதலமைச்சர் நாற்காலி ஸ்டாலினுக்கு எட்டாமலே இருந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது திமுக தலைவர் கருணாநிதியை வயோதிகம் செயல்பட விடவில்லை. அப்போது ஸ்டாலினின் வித்தியாசமான தேர்தல் பிரசார உத்தியை உலகம் பார்த்தது. அப்போது தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் செய்த ஸ்டாலின், நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் என அதற்கு பெயர் வைத்திருந்தார். ஜெயலலிதாவா ஸ்டாலினா என்ற விறுவிறுப்புடன் நடந்த அந்தத் தேர்தலில் திமுக சரிக்கு சமமாக வாக்குகளைப் பெற்று, சாதித்தது. ஆனால், ஆட்சிக் கட்டிலில் அமர அது போதுமானதாக இல்லை.கடந்த ஐந்தாண்டுகளாக எதிர்கட்சித் தலைவர் என்ற பதவி அடைமொழி போல ஸ்டாலின் பெயருக்கு முன்னால் ஒட்டிக் கொண்டது. என்ன இருந்தாலும் அதிகாரம் கையில் இல்லையே என்ற குறை அவர் கண்களில் பளிச்சென தெரிந்தது கருணாநிதி மறைவின் போதுதான்.கருணாநிதி என்ற மிகப் பெரிய இழப்புக்குப் பிறகு, ஸ்டாலினை தலைவராக ஏற்றது திமுக.அதன் பிறகு ஸ்டாலின் சந்தித்த ஏச்சுக்களும் பேச்சுக்களும் விமர்சனங்களும் கொஞ்ச நஞ்சமில்லை.ஸ்டாலின் மீது வைக்கப்பட்ட அத்தனை விமர்சனங்களுக்கும் விடை சொல்லும் தேர்தலாகத்தான் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பார்க்கப்பட்டது. கருணாநிதி இல்லாமல் திமுக சந்திக்கும் முதல் தேர்தல் இது. ஸ்டாலின் எத்தனை உறுதியானவர் என்பதை இந்தத் தேர்தல் ஆடுபுலி ஆட்டம் காட்டிவிட்டது எனலாம்.இந்த தேர்தலிலும் ஸ்டாலினின் வித்தியாசமான அணுகுமுறைக்கு பஞ்சமில்லை. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் அவர் தொகுதி வாரியாக மக்களை சந்தித்தார். அவர்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். திமுக ஆட்சிக்கு வந்த நூறு நாட்களில் இந்தக் கோரிக்கைகள் எல்லாமே தீர்த்து வைக்கப்படும் என வாக்களித்தார்.பொதுமக்களிடம் தலைவர்கள் வாக்கு கொடுப்பது சகஜம்தான். ஆனால் அவை எல்லாம் வாக்குகளாக மாறுமா? அதற்குத்தான் இப்போது விடை தெரிந்திருக்கிறது. 234 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் முன்னிலையில் உள்ளன. மத்திய தலைவர்கள் பலரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்லி வரும் நிலையில், அவர் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. இந்த சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை தாங்கள் ஜெயிக்க வேண்டும் என உழைத்த கட்சிகளை விட, ஸ்டாலின் ஜெயித்துவிடக் கூடாது என உழைத்த கட்சிகள் அதிகம். அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி இன்று வெற்றி என்றும் மைல்கல்லை அடைந்திருக்கிறார் ஸ்டாலின். இந்த வெற்றியால் நாட்டு மக்கள் அடையப் போவது என்ன என்பது போகப் போகத்தான் தெரியும்!
Tags:    

மேலும் செய்திகள்