சிறையில் கைதி கொல்லப்பட்ட வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை
பாளையங்கோட்டை சிறையில் கைதி கொலை செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில், கைதிகளுக்கு இடையே நடைபெற்ற மோதலில் முத்துமனோ என்ற கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில்,கவனக்குறைவாக செயல்பட்ட சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி இளங்கோ முன் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாகவும், சிறைத் துறையினர் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பு விளக்கம் அளித்தது. மேலும், முத்துமனோவின் பிரேதப் பரிசோதனை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, பிரேத பரிசோதனை முடிக்கப்பட்ட முத்துமனோ உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, அரசுத் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.