சிதம்பரம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது
சிதம்பரம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்புவை போலீசார் கைது செய்தனர்
சிதம்பரம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்புவை போலீசார் கைது செய்தனர். பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக திருமாவளவனை கண்டித்து சிதம்பரத்தில் பாஜக மகளிர் அணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர். திருமாவளவன் எம்.பியாக உள்ள சிதம்பரம் தொகுதியில் போராட்டம் நடந்தால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை எழும் என்பதால் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்புவை இசிஆர் முட்டுக்காட்டில் போலீசார் கைது செய்தனர்.
கைதான நடிகை குஷ்பு போராட்டம் - திருமாவளவன் மன்னிப்பு கேட்க கோரிக்கை
இறுதி மூச்சு வரை போராடுவோம் - குஷ்பு ட்வீட்
கைது செய்யப்பட்டது குறித்து, ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள நடிகை குஷ்பு, பெண்களின் பாதுகாப்புக்காக இறுதி மூச்சு வரை போராடுவோம் என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் வழியில் பயணிப்பதாக கூறியுள்ள குஷ்பு, அட்டூழியங்களுக்கு தலைவணங்க மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் கைது செய்யப்பட்டதை எண்ணி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மகிழ்ச்சி அடைய வேண்டாம் என்றும், இது உங்களின் தோல்வி என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கைதாகி தையூர் தனியார் விடுதியில் சிறை வைக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் அரசியலுக்காக பெண்களை தரக்குறைவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பதாக குற்றம்சாட்டிய அவர், திருமாவளவன் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.