அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு விவகாரம் - ஸ்டாலின் தலைமையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கும் வரை, திமுகவின் போராட்டம் தொடரும் என, அக்கட்சித்தலைவர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, ஆளுநர் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது திமுகவின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பொதுச்செயலாளர் துரைமுருகன், எம்.பி. கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது, இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய ஸ்டாலின், ஆளுநருக்கு அழுத்தம் தர அதிமுக அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், இட ஒதுக்கீடு கிடைக்கும் வரை திமுகவின் போராட்டம் தொடரும் எனவும் அவர் கூறினார்.