தமிழகத்தில் இன்று முதல் இயல்பு நிலை ..
புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு பொதுப் போக்குவரத்து இன்று தொடங்கியது
பொதுப் போக்குவரத்து சேவை இன்று முதல் தொடங்கியது
புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு பொதுப் போக்குவரத்து இன்று தொடங்கியது. சென்னையில் உள்ள 36 பணிமனைகளில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட்டன. சானிடைசர், முகக் கவசம் அணிவது உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க பயணிகள் அறிவுறுத்தப்பட்டது. முன்னதாக சிறப்பு பூஜை செய்து, ஊழியர்கள் பேருந்துகளை இயக்கினர்.
165 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
4ஆம் கட்ட ஊரடங்கின், புதிய தளர்வுகள் அறிவிப்பின் படி, தமிழகம் முழுவதும் இன்று கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த காலை முதலே பக்தர்கள் குவிந்தனர். சமூக இடைவெளியை கடைபிடிக்க வசதியாக, வட்டம் வரையப்பட்டுள்ளது. அம்மன் சன்னதி மட்டுமே திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 165 நாட்களுக்கு பிறகு கோயில் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
5 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட பூங்காக்கள் - பொதுமக்கள் நடைபயிற்சி
தமிழகத்தில் 5 மாதங்களுக்கு பின் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளது. சென்னை தியாகராயநகரில் உள்ள பூங்காவில், அதிகாலையிலேயே பொதுமக்கள் நடைபயிற்சியை தொடங்கினர். அனைவரும் தனிமனித இடைவெளியை கடைபிடித்து முகக் கவசம் அணிந்தவாறு நடைபயிற்சியில் ஈடுபட்டனர். பூங்காவிற்குள் நுழையும் போது, கிருமி நாசினி தெளித்த பிறகே, பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
5 மாதங்களுக்கு பிறகு பழனியில் பக்தர்கள் அனுமதி - ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
5 மாதங்களுக்கு பிறகு பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தொடங்கியுள்ளனர். அரோகரா என்ற சரணகோஷம் முழங்க பக்தி பரவசத்தோடு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. முன்பதிவு தொடங்கிய உடன் ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்று தீர்ந்துள்ளன. ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. படி வழியாக மட்டுமே அனுமதிக்கப்டுகின்றனர். சமூக இடைவெளியை உறுதி செய்ய ஒரு மணி நேரத்திற்கு 50 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் ஓட தொடங்கிய அரசு பேருந்துகள் - முதல்கட்டமாக மாவட்டத்திற்குள் 200 நேருந்துகள் இயக்கம்
மதுரை மாவட்டத்தில் உள்ள 16 அரசு பணிமனைகளில் இருந்து 200 பேருந்துகள் இன்று முதல் ஓட தொடங்கியுள்ளன. மொத்தமாக 950 பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகளில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுநர், நடத்துனருக்கு முக கவசம், கையுறை, கிருமி நாசினி வழங்கப்பட்டுள்ளது. பேருந்தில் பயணிப்பவர்களுக்கு நடத்துனர் கிருமி நாசினி வழங்கி, சமூக இடைவெளியை கடை பிடிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிறுத்தங்களில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளபடுகிறன்றன.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் குவிந்த பக்தர்கள்
வழிபாட்டு தலங்கள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், பக்தர்கள் அதிகாலையிலேயே குவிந்தனர். சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக வரையப்பட்டிருந்த வட்டங்களில், பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும், கை, கால்களை சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, தெர்மல் ஸ்கேன் பரிசோதனைக்கு பிறகே, பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
காஞ்சிபுரத்தில் முதல்கட்டமாக 75 பேருந்துகள் இயக்கம் - சென்னைக்கு நேரடி பேருந்து சேவை விட மக்கள் கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு பேருந்து சேவை தொடங்கியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், பாலூர், உத்திரமேரூர், ஓச்சேரி உள்ளிட்ட மாவட்ட எல்லைகள் வரை அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 5 பணிமனைகளிலிருந்து 75 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப, அரசு பேருந்துகள் கூடுதலாகவும் இயக்கப்பட உள்ளதாக விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழக காஞ்சிபுரம் மண்டல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை, வேலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக பேருந்து போக்குவரத்து இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர்.
14 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கம்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 6 பணிமனைகளிலும் இருந்து முதல் கட்டமாக 140 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில் ஓட்டுனர், நடத்துனர் என 408 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக பேருந்துகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பாதுகாப்பு உபகரணங்கள் சானிடைசர், முகக் கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து ஓட்டுனர்கள் பேருந்தை இயக்கினர். திருப்பூர் -காங்கேயம், திருப்பூர் - பல்லடம்,திருப்பூர் - அவினாசி என 14 வழிதடத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருச்செந்தூர் கோயிலில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி
திருச்செந்தூர் முருகன் கோயிலில் 2 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 5 மணி அளவில் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 7 மணிக்கு உதய மார்த்தாண்டம் தீபாரதனையும் நடைப்பெற்றது. இதில், பக்தர்கள் சமூக இடை வெளியை பின்பற்றி முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் சர்க்கரை நோய் , ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. கோயில் வளாகத்தை சுற்றி 13 இடங்களில் பக்தர்கள் கிருமி நாசினி கொண்டு தூய்மை செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கற்பூரம் ஏற்றி பூஜை செய்து இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள்
குடியாத்தம் பணிமனையில் இருந்து வேலூர், காட்பாடி, பேர்ணாம்பட், பரதராமி, உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 20 பேருந்துகள் இன்று இயக்கப்பட்டது. முன்னதாக பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்கு கற்பூரம் ஏற்றி பூஜைகள் செய்யப்பட்டு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தினை இயக்கினர். முன்னதாக பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பயணிகளுக்கு வெப்ப பரிசோதனை செய்த பேருந்தில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.