நாளை முதல் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி - பேருந்துகளை இயக்க தயாராகும் ஊழியர்கள்
தமிழகத்தில் நாளை முதல் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு பேருந்துகளை இயக்குவதற்காக போக்குவரத்து ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் நாளை முதல் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு பேருந்துகளை இயக்குவதற்காக போக்குவரத்து ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள அரசு பேருந்து பணிமனைகளில் இதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. 5 மாதங்களாக முடங்கி கிடந்த பேருந்துகளை , பணிமனை ஊழியர்கள் ஆய்வு செய்து, அவற்றை தயார் படுத்தி வருகின்றனர். பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.
சென்னையில் 7ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை - தயாராகி வரும் மெட்ரோ ரயில் நிலையங்கள்
தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு புதிய தளர்வுகளின் படி, வருகிற 7ம் தேதி முதல் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை துவங்குகிறது. இதையடுத்து, சோதனை ஓட்டத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேலும், சமூக இடைவெளி என்ற அடிப்படையில் 70 முதல் 100 பேர் மட்டுமே ஒரு ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட உள்ளனர். 5 மாதங்களுக்கு பிறகு, மீண்டும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. பயணிகள் வரிசையில் நிற்பதற்காக வட்டங்கள் வரையப்பட்டு வருகின்றன.
5 மாதங்கள் கழித்து நாளை வணிக வளாகங்கள் திறப்பு - சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்
தமிழக அரசின் ஊரடங்கு தளர்வு அறிவிப்பை தொடர்ந்து, ஐந்து மாதங்கள் கழித்து நாளை முதல் வணிக வளாகங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள வணிக வளாகங்களை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வணிக வளாகங்களை திறக்க அனுமதித்தாலும், அங்குள்ள திரையரங்குகளுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வளாகங்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு வணிக வளாகங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.