"கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகள் போதைப் பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக உள்ளதா?"
கண்ணகி நகர், பெரும்பாக்கம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி பகுதிகள் போதைப் பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக உள்ளதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட தம்மைம விடுவிக்க கோரி வேளாங்கண்ணி என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் மனு மீது தாமதமாக முடிவெடுத்ததைச் சுட்டிக்காட்டி வேளாங்கண்ணியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும் இந்த பகுதிகளைச் சேர்ந்த எத்தனை பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்? போதைப் பொருள் தடுப்புச் சட்டப்பிரிவின் கீழ் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? இந்த பகுதிகள் போதைப் பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக உள்ளதா? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக டி.ஜி.பி., சமூக நலத்துறை செயலாளர், பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கு உத்தரவிட்டனர்.