"கட்டணம் செலுத்தும் படி பெற்றோரை நிர்ப்பந்திக்கக் கூடாது" - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
கட்டணம் செலுத்தும்படி நிர்பந்திக்க கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்ற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் சங்கங்களின் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தனியார் பள்ளிகள், கட்டணம் செலுத்தும் படி பெற்றோரை நிர்ப்பந்திக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பெற்றோர் தாமாக முன்வந்து கட்டணம் செலுத்துவதற்கு எந்த தடையும் இல்லை எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது, கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களுக்கு, 248 கோடியை 76 லட்சம் ரூபாய் தனியார் பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த தொகை மூலம், 3 மாதங்களுக்கு ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் சில நீதிமன்றங்கள், தவணை முறையில் கட்டணம் செலுத்துவது தொடர்பாக திட்டம் வகுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டப்பட்டது, இதை பதிவு செய்த நீதிபதி மகாதேவன், தவணைமுறையில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக திட்டம் வகுக்க கோரி தனியார் பள்ளிகள் சங்கங்கள் அரசுக்கு மனு அளிக்க அறிவுறுத்தினார். மேலும் தனியார் பள்ளிகளின் இந்த கோரிக்கையை பரிசீலித்து திட்டம் வகுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு ஜூலை 6ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.