பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - பள்ளிக் கல்வித்துறை முன் உள்ள சவால்கள் என்ன?
10 வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா என குழப்பம் ஏற்பட்ட நிலையில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் கருதி, இந்த முடிவு எடுக்கப்பட்டாலும், இதை செயல்படுத்துவது பள்ளிக்கல்வித்துறைக்கு சவாலானது என கூறப்படுகிறது.காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்கு 80 சதவீத மதிப்பெண்களும், வருகை பதிவேடுக்கு 20 சதவீத மதிப்பெண்களும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.80 சதவீத மதிப்பெண்கள் எப்படி கணக்கிடப்படும் என கேள்வி எழுந்துள்ளதுடன், காலாண்டு தேர்வுக்கு 40 சதவீதம், அரையாண்டு தேர்வுக்கு 40 சதவீதம் என கணக்கிடப்படுமா என முடிவெடுக்க வேண்டும்.காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் கவனம் செலுத்தாத மாணவர்கள் மதிப்பெண்கள் குறைவாக பெற்றால், தேர்ச்சி செய்யப்படுவார்களா என விளக்க வேண்டும். மதிப்பெண்களை தலைமை ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் முடிவு செய்ய உள்ளதால், அதில் தவறுகள் நடக்காமல் வெளிப்படையான முறையில் மதிப்பெண்கள் அளிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஐடிஐ உள்ளிட்ட படிப்புகளில் சேருபவர்களின் சேர்க்கை எப்படி நடக்கும் என்பது குறித்து விளக்கப்படவில்லை.இதுபோன்ற சிக்கல்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை தெளிவான வழிகாட்டுதல்களையும், விதிமுறைகளையும் வெளியிட வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.