பேக்கிங் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - தமிழக அரசு அரசாணை வெளியீடு
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொருட்களை பேக்கிங் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் பாக்கெட், கேரி பேக், பிளாஸ்டிக் கொடி மற்றும் டீ கப் உள்பட மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பால், எண்ணெய், மருந்து ஆகியவற்றை பேக்கிங் செய்வதற்கு பயன்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர், தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், பேக்கிங் செய்வதற்காக பயன்படுத்தும் பிளாஸ்டிக் வகைகளை விதிவிலக்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த நிலையில், விலக்கு நீக்கப்பட்டு இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஜூன் 5 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திண்பண்டங்கள் உள்ளிட்டவைகளை மறு சுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பையில் பேக் செய்ய தடை விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது