சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி மறைவு - தாமிரபரணி நதிக்கரையில் ஜமீன் உடல் தகனம்
மறைந்த சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி உடல் தாமிரபரணி நதிக்கரையில் தகனம் செய்யப்பட்டது.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் புகழ்பெற்ற சமஸ்தானமாக விளங்கிய சிங்கம்பட்டி ஜமீனின் மன்னராக தமது 5 வயதில் முடிசூட்டி கொண்டவர் முருகதாஸ் தீர்த்தபதி. 89 வயதான அவர் வயது மூப்பால் நேற்று காலமானர். தமிழகத்தின் கடைசி மன்னராக விளங்கிய ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் உடல் நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி சமஸ்தானத்தில் உள்ள அவரது அரண்மனையில் தர்பார் மண்பத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திமுக முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், ராமநாதபுர சமஸ்தான ஜமீன் உள்ளிட்ட பலரும், சிங்கம்பட்டி சமஸ்தானத்திற்குட்பட்ட கிராம மக்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி உடலுக்கு ராஜ முறைப்படி இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஜமீனின் உடல் வைக்கப்பட்டு சிங்கம்பட்டி தாமிபரணி நதிக்கரையோரம் உள்ள இடுகாட்டிற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி உடல் தகனம் செய்யப்படது. இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.