எத்தனை தனி நபர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது..? - உயர்நீதிமன்றம் கேள்வி

எத்தனை தனி நபர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது? என பதிலளிக்குமாறு டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Update: 2020-03-09 19:01 GMT
எத்தனை தனி நபர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது? என பதிலளிக்குமாறு டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாயமான தொழிலதிபர் குப்புசாமியை மீட்க கோரி தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நேரில் ஆஜரான குப்புசாமி, தனது மகன் மீது  அளித்த புகாரில் வழக்குப்பதிய தவறிய, சூனாம்பேடு போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும், தனக்கு போலீஸ் பாதுகாப்பு தரவும் கோரி மனு தாக்கல் செய்தார்.

 இதையடுத்து, டிஜிபி மற்றும் மாநகர காவல் ஆணையரை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், தமிழகத்தில் எத்தனை தனி நபர்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது? என கேள்வி எழுப்பினர். மேலும், எதற்காக பாதுகாப்பு வழங்கப்படுகிறது? போலீஸ் பாதுகாப்பு தேவையா என்பதை எத்தனை நாளுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படுகிறது? என்றும் வினா எழுப்பினர்

கட்டப் பஞ்சாயத்து பேர்வழிகளுக்கு எதற்காக போலீஸ் பாதுகாப்பு என கேட்ட நீதிபதிகள், சமூகத்தில் தன்னை உயர்ந்தவர்களாக காட்டிக் கொள்வோருக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறதா? என்பது போன்ற கேள்விகளுக்கு மார்ச் 12க்குள் பதிலளிக்குமாறு தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டனர்.மேலும், அன்றைய தினம் செங்கல்பட்டு எஸ்.பி, சூனாம்பேடு ஆய்வாளர் நேரில் ஆஜராகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்