வாட்ஸ் ஆப்-ல் தகவல் கூறிவிட்டு மீண்டும் ஒரு காவலர் தற்கொலை - தீர்வு காணுமா காவல்துறை?

விழுப்புரத்தில் காவலர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் தகவல் தெரிவித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணத்திற்கு என்ன காரணம்.

Update: 2020-03-04 09:41 GMT
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த சர‌வண‌ன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இரவு 8 மணி... பணி முடிந்து வீடு திரும்புவதாக கூறிவிட்டு சென்ற சரவண‌னின் வாட்ஸ் ஆப் எண்ணில் இருந்து, இது என்னுடைய இறுதி நிமிடங்கள் என்ற குறுஞ்செய்தி வருகிறது. இதை கண்டு பதறிப்போன சக காவலர்கள், அவர் அனுப்பிய கூகுள் வரைபடம் மூலம் அவர் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளனர்.  

காவல்துறையினர் விரைந்து சென்ற பார்த்தபோது, செஞ்சியை அடுத்த, காரை காப்புக்காட்டில் புளிய மரத்தில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டார் சரவண‌ன்...

சரவ‌ணன் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த விழுப்புரம் மாவட்டம் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் விசாரணை மேற்கொண்டார். 

இந்த நிலையில், உயிரிழந்த காவலர் சரவண‌ன் பேசியதாக சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று பரவியது...

இந்த ஆடியோவை கேட்ட பலர் பணிச்சுமை காரணமாகவே சரவண‌ன் உயிரிழந்திருப்பதாக குற்றச்சாட்டு முன்வைத்த‌தால், காவல்துறையினருக்கு நெருக்கடி அதிகரித்த‌து. 

தொடர்ந்து நடந்த விசாரணையில், மேலும் ஒரு காரணம் வெளியாகியுள்ளது.  சரவணனுக்கு ஆன்லைனில் சூதாடும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆன்லைன் ரம்மி என்ற அந்த செயலியில் அவ்வப்போது பணத்தை இழந்த காவலர் சரவ‌ணன், கடந்த 2 ஆம் தேதி சுமார் 45 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார். இதனால்,  நண்பர்களிடம் கடன் கேட்ட சரவண‌ன், மன உளைச்சலில் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்ற சந்தேகமும் முன்வைக்கப்படுகிறது.  

கடந்த சில தினங்களில் தமிழகத்தில் 5 காவல்துறையினர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். தொடரும் காவல்துறையினர் தற்கொலையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.. 

Tags:    

மேலும் செய்திகள்