பேஸ்புக் மோசடி - பெண் குரலில் பேசி பணம் பறிக்கும் கல்லூரி மாணவர்கள்

பேஸ்புக் மூலம் பழகி பெண் குரலில் பேசி பணம் பறித்த கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2020-01-26 03:03 GMT
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த தருண், ஆதி,  நவீன்,  யுவராஜ் மற்றும்  சதீஷ்  ஆகிய 5 பேரும் வெவ்வேறு தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து  வரும் நிலையில், நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்.   இவர்களுக்கு பேஸ்புக் மூலம் ஈரோட்டை  சேர்ந்த சண்முக சுந்தரம்  நண்பராக  சேர்ந்துள்ளார். அவரிடம் தருண், பெண் குரலில் பேசி அசத்தி உள்ளார்.

இதையடுத்து, தருணை நேரில் பார்க்கும் ஆசையில் சென்னை வந்த  சண்முக சுந்தரத்தை  மாதவரம் ரவுண்டானா அருகே 5 பேர்களும் சந்தித்து உள்ளனர். அப்போது சண்முக சுந்தரத்தை தாக்கியதோடு அவரிடம் இருந்த  தங்க சங்கிலி , கைக் கடிகாரம்  மற்றும் ஏடிஎம் கார்டை பறித்துக் கொண்டு ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணையும் கேட்டு தெரிந்துள்ளனர்.

பின்னர், சண்முக சுந்தரத்தை தருணும் நவீனும்  பிடித்து வைத்துக் கொள்ள மற்ற மூவரும் பணம் எடுக்க ஏ.டிஎம் சென்ற நிலையில், ரோந்து போலீசாரிடம், நடந்ததை சொல்லி இருக்கிறார், சண்முகசுந்தரம். உடனே, தருணையும் நவீனையும் போலீசார்  கைது செய்தபோது, ஏடிஎம்மில் இருந்து திரும்பி வந்த மற்ற மூவரும் இதனை கண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளனர்.

தப்பியோடி மூவரும் கிழக்கு கடற்கரை சாலையில் பனையூர் பகுதியில் விபத்தில் சிக்கியதில், யுவராஜ், சதீஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆதி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். பேஸ்புக் மூலம் நண்பர் போல பழகி, பெண் குரலில் பேசி மயக்கி வரவழைத்து  பணம் பறிக்கும் முயற்சியில் கல்லூரி மாணவர்கள்  ஈடுபட்ட  சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்