பாலர் பள்ளிபோல் காட்சி அளிக்கும் காவல் நிலையம் - விளையாட பொம்மைகள், சுவரை அலங்கரிக்கும் படங்கள்

விசாரணைக்கு அழைத்து வரப்படுபவர்களின் குழந்தைகள் விளையாடுவதற்காக காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் குழந்தை நண்பர்கள் அறை அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2019-12-28 11:25 GMT
சுவர் எங்கும் ஓட்டப்பட்டுள்ள பட்டாம்பூச்சி படங்கள், நம்மீது தாவ காத்திருக்கும் ஸ்பைடர் மேன், வரவேற்கும் சோட்டா பீம் மற்றும் லிட்டில் கிருஷ்ணா படங்கள் என குட்டி பாலர் பள்ளியாகவே காட்சி அளிக்கிறது காஞ்சிபுரம் மகளிர் காவல்நிலையத்தில் உள்ள ஒரு அறை...

அதேபோல் அழகிய தரைவிரிப்புகளும் ஆங்காங்கே போடப்பட்டுள்ள விளையாட்டு பொம்மைகளும் அந்த அறை காவல்நிலையத்தில் உள்ளது என்பதையே நம்ப மறுக்கும் வகையில் உள்ளது.

விசாரணைக்கு அழைத்து வருபவர்களுடைய குழந்தைகளின் மனநிலையில் மாற்றமோ, பயமோ ஏற்படுவதை தடுக்கும் வகையில் குழந்தைகள் நண்பர்கள் அறை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதேபோல் பச்சிளம் குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்காக பாலூட்டும் அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

காவல் நிலையம் என்ற‌  சூழ்நிலையை குழந்தைகள் மறக்கும் வகையில் செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாடுகள் வரவேற்கும் விதமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதனை அனைத்து மகளிர் காவல்நிலையத்திலும் நடைமுறைபடுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்