நெருப்பு வளைய சூரிய கிரகணம் - வானில் தோன்றிய அற்புத நிகழ்வு
வானில் தோன்றிய அபூர்வ நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரணகத்தை பிரத்யேக கருவி மூலம் பார்த்த பொதுமக்களின் முகத்தில், வியப்பு கலந்த ஆச்சரியம் ஏற்பட்டது.
நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்க்க மாநிலம் முழுவதும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில், அதிக சக்தி வாய்ந்த 3 தொலைநோக்கிகள் மூலம் சூரிய கிரகணத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெல்டர்கள் பயன்படுத்தும் கண்ணாடிகள், என்-14 ரக கண்ணாடி, அங்கீகரிக்கப்பட்ட கண்ணாடி உள்ளிட்ட சன் பில்ட்டருடன் கூடிய கண்ணாடிகளை பயன்படுத்தி கிரகணத்தை பார்த்து பள்ளி மாணவர்கள், பெரியவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
இதேபோல் மதுரை மாநகரில், இந்த அரிய நிகழ்வை, சிறியவர்கள் மூலம் பெரியவர்கள் அனைவரும் பார்வையிட்டனர். சன் பில்ட்டருடன் கூடிய கண்ணாடிகளை பயன்படுத்தி அவர்கள் கிரகணத்தை பார்த்தனர். சூரியனை மறைக்கத் தொடங்கும் நிலவு படிப்படியாக முன்னேறி இறுதியாக சூரியனின் மையப்புறத்தை அடைந்தது. அப்போது நெருப்பு வளையம் தெரிந்ததால், மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர்.
திருச்சி கோளரங்கில் திரண்ட சிறியவர்கள், பெரியவர்கள், கங்கண சூரிய கிரகணத்தை முழுமையாக பார்த்தனர். தொலைநோக்கி மற்றும் பிரத்யேக கண்ணாடிகள் மூலம் நெருப்பு வளைய கிரகண நிகழ்வை கண்டு அவர்கள் உற்சாகம் அடைந்தனர். திருச்சியில் 95 விழுக்காடு சூரியனை சந்திரன் மறைத்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வை பார்த்த ஒரு சிறுமி சூரியனுக்கு ஆரஞ்சு வர்ணம் பூசியது போல் இருப்பதாக தெரிவித்தார்.