குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சேலம், கிருஷ்ணகிரியில் பேரணி
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் தொடர்கிறது.
கிருஷ்ணகிரி நகர ஜமாத் கூட்டமைப்பு, இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பேரணி மற்றும் போராட்டம் நடைபெற்றது. பழைய பேட்டையில் ஒன்று திரண்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், முக்கிய சாலை வழியாக ஊர்வலமாக புதிய பேருந்துநிலையம் அருகிலுள்ள அண்ணாசிலைக்கு வந்தனர். அங்கு இஸ்லாமிய அமைப்புக்கு ஆதரவாக, அனைத்து கட்சியினரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத ரீதியில் இந்தியாவை பிளவுப்படுத்தக் கூடாது என்றும் நாட்டின் ஒருமைப்பாட்டை, பன்முகத் தன்மையை சீர்குலைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினர். மக்கள் நலன் கருதி, உடனடியாக குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதேபோல், சேலத்திலும், சுமார் 5ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடைபெற்றது. குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.