93 வயதான முதியவரிடம் பணம் கொள்ளை : தாத்தா என அன்பாக பேசி திருட்டு
93 வயதான ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் தாத்தா என்று அன்பாக பேசி 20 ஆயிரம் ரூபாய் திருடிச் சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வரும் 93 வயதான முதியவர் சதாசிவம் , மீன்வளத்துறையில் சூப்பிரண்டாக பணியாற்றி கடந்த 1980-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். தனது மகள் குடும்பத்துடன் வசித்து வரும் சதாசிவம், தனது பென்ஷன் பணத்தை வங்கியில் இருந்து எடுத்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது 40 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் இருசக்கரத்தில் வந்து தாத்தா என்று அன்புடன் பேசி, வீட்டில் விட்டுவிடுவதாக கூறியுள்ளார். அப்போது சதாசிவமிடம் பணத்தை வாங்கிய அந்த நபர், அவரே வைத்து கொண்டுள்ளார். பின்னர் சதாசிவத்தை வீட்டில் விட்ட அந்த நபர், பணத்தை தராமல் சென்றுள்ளார். இது குறித்து சதாசிவம், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.