அழிந்து வரும் முத்து எடுக்கும் தொழில் - சங்கு குளிக்கும் தொழிலுக்கு மாறிய மீனவர்கள்
தூத்துக்குடியில் பிரபலமான முத்து எடுக்கும் தொழில் அழிந்து வரும் நிலையில் அதற்கு மாற்றாக சங்கு குளிக்கும் தொழிலுக்கு மாறி வருகின்றனர் மீனவர்கள்.
1955-ஆம் ஆண்டு காலகட்டத்தில் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில், பெரும்பாலான மீனவர்கள் கடலில் முத்து எடுக்கும் தொழில் செய்து வந்தனர். பிரதான தொழிலாக இது விளங்கியதால், தூத்துக்குடிக்கு முத்து நகர் என்ற மற்றொரு பெயரும் உண்டு. மீனவர்கள் கடலில் இருந்து எடுத்துவரும் முத்துக்களை, வியாபாரிகள் வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். விலை உயர்ந்த ஆபரண பொருட்களுக்கும், தங்க நகைகளில் பதிப்பதற்கும் இதை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில்
சில தட்ப வெட்ப சூழ்நிலைகளால், மீனவர்கள் முத்து எடுக்கும் தொழிலை கைவிட்டு, சங்கு சிற்பி எடுக்கும் தொழிலுக்கு மாறியுள்ளனர்.
அரசு அனுமதியோடு சுமார் ஐந்தாயிரம் மீனவ குடும்பங்கள், சங்கு சிற்பி எடுக்கும் தொழிலை நம்பி வாழ்கின்றனர். அதிகாலையில் கடலுக்கு சென்று மாலை கரை திரும்பும் மீனவர்கள், கடலின் முகப்பில் இருந்து பத்துமைல் தொலைவில் சென்று சங்குகளை எடுத்து வருகின்றனர். இந்த தொழிலை பாதுகாக்க, சங்கு குளிக்கும் மீனவர்களுக்கு அரசு, உபகரணங்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தூத்துக்குடி மீண்டும், முத்துநகர் என்று அழைக்கப்பட சங்கு குளிக்கும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.