காட்டிக்கொடுத்த சிசிடிவி பதிவுகள் - செயின் பறிப்பு குற்றவாளி புறா கார்த்திக் கைது
சென்னையின் பெரும்பாலான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் நீண்ட நாட்களாக செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அனகாபுத்தூரில், சத்தியவாணி என்ற 57 வயது மூதாட்டி நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது 2 சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலிச்செயினை கண் இமைக்கும் நேரத்தில் பறித்து சென்றுள்ளான்.
கடந்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து மாநகர போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் செயின்பறிப்பு சம்பவம் நடந்த அனகாபுத்தூரில் தொடங்கி ஓட்டேரி வரை உள்ள கொள்ளையன் பயணித்த பகுதிகளில் உள்ள 175 சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன், இரண்டரை மணி நேரத்தில் வியாசர்பாடி பகுதிக்கு சென்று அங்கு உள்ள அடகு கடையில் செயினை விற்று பணத்தை வாங்கிச்சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.
கொள்ளையன் பயன்படுத்திய 2 சக்கர வாகன எண்ணை வைத்து பார்த்தபோது அது ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தர்கா ஊழியரிடம் திருடப்பட்டது என்பது உறுதியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன், பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி, ஜங்கிலி கணேஷ் ஆகியோரின் கூட்டாளி புறா கார்த்திக் என்றும் அவன் ஈரோட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
மாதம் ஒருமுறை சென்னைக்கு வந்து 2 சக்கர வாகனத்தை திருடி, அதனைக்கொண்டு செயின் பறிப்பு செயல்களில் அவன், தனியாக வீட்டில் இருக்கும் பெண்களிடம் தனது கைவரியையை காட்டி வந்துள்ளான்.
மதியம் 3 மணியில் இருந்து 4 மணிக்குள் அடுக்குமாடி குடியிருப்புகளை நோட்டமிட்டு வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் தண்ணீர் தொட்டி சுத்தம் செய்ய வந்ததாக பேச்சு கொடுக்கும் புறா கார்த்திக், பின்னர் குடிக்க தண்ணீர் கேட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் செயினை அறுத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது
பின்னர் புறாகார்த்திக் வீட்டில் இருந்த 35 சவரன் நகைகள் 3 மற்றும் லட்சம் ரூபாய் பணத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளர்.
மேலும், நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த புறா கார்த்திக் பிடிபட கண்காணிப்பு கேமரா பதிவுகள் முக்கிய பங்காற்றியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.