அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி : சென்னையில் டி.பி.ஐ. வளாகத்தில் இன்று தொடங்கியது
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பின்லாந்து கல்வி குழுவினர் அளித்த பயிற்சி பயன் உள்ளதாக அமைந்திருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் பின்லாந்து சென்றிருந்தபோது, தமிழக அரசு பள்ளிகளை மேம்படுத்துவது தொடர்பாக, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அந்நாட்டு கல்வித் துறையுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து 6 பேர் கொண்ட அந்நாட்டு குழுவினர் அண்மையில் தமிழகம் வந்தனர். அரசு பள்ளிகளை சுற்றிப் பார்த்த நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கற்பித்தல் குறித்த பயிற்சியை இன்று முதல் வழங்கி வருகிறது. முதற்கட்டமாக இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 150 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கற்பித்தல் முறை குறித்து, பின்லாந்து குழுவினர் பயிற்சியை வழங்கினர். குறிப்பாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான கற்றல் முறையை அறிமுகம் செய்வது, 9 முதல் 12-ம் வகுப்பு வரை தொழில் முறை சார்ந்த கல்வியை வழங்குவது குறித்து இன்று பயிற்சி அளிக்கப்பட்டது. கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பாரட்டத்தக்க வகையில் இருப்பதாகவும், பாடம் கற்பிக்கப்படும் வழி முறைகளில் மாற்றம் கொண்டு வருவது தமிழகத்தில் கல்வியின் தரத்தை மேம்படுத்த உதவும் என்று தெரிவித்தனர். மாணவர்களின் திறன்களை வளர்தெடுக்கும் வகையில் புதிய கற்றல் வழிமுறைகளை ஏற்ப்படுத்த வேண்டும் என பின்லாந்தில் இருந்து வந்துள்ள கல்வி குழுவினர் தெரிவித்தனர். மாணவர்களுடைய மற்ற திறன்களையும் எப்படி வளர்க்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியதாகவும் பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள் தெரிவித்தனர்.