தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
குமரி கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறிவரும் நிலையில், நாகர்கோவில், இறைச்சகுளம், சுசீந்திரம், ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், பூதப்பாண்டி உள்ளிட்ட இடங்களில் பரவலாக கனமழை பெய்தது.
தொடர் மழை காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் கம்பை நல்லூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் பகுதிகளில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் நெல் சாகுபடி செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் அருகே மழை காரணமாக, அரசு நடுநிலைப் பள்ளியின் இரண்டு வகுப்பு அறைகளின் மேற்கூரை உடைந்து தண்ணீர் தேங்கியுள்ளது. வகுப்பறைக்குள் தண்ணீர் தேங்கியதால், மாணவ, மாணவிகள் உட்கார முடியாமல், பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கடலூரில் பெய்த மழையால் சாலை மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. புதுச்சேரி சாலையில் உள்ள கங்கனாங்குப்பம் என்ற இடத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் ஆத்திரமடைந்த மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து,போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா பகுதிகளில் 5 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், சோழவரம் சுற்றுப்புற பகுதிகளில் பல மணி நேரமாக மழை நீடித்தது.
மாமல்லபுரத்தில் மழை காரணமாக, புராதன சின்னங்களின் அருகே தண்ணீர் தேங்கியது. கடற்கரை கோயிலை சுற்றி உள்ள அகழியில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சி அளித்தது. மழையிலும் சுற்றுலா வந்த பயணிகள் பலர், ரம்மியமாக காட்சியளித்த சிற்பங்களின் அருகில் படம் எடுத்துக் கொண்டனர்.
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான கிடாரிபட்டி, திருவாதவூர், அழகர்கோவில், கொட்டாம்பட்டி, நரசிங்கம்பட்டி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. மழையால் கொட்டாம்பட்டி பேருந்து நிலையத்தில் மரம் ஒன்று சாய்ந்தது. குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் நீர் தேங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்