"ஆட்சேபனை இல்லாத நிலங்கள் ஏழைகளுக்கு வழங்கப்படும்" - அரசாணை ரத்துகோரிய வழக்கில், தமிழக அரசு விளக்கம்
ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்கள், ஏழைகளுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அரசு புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. நில ஆக்கிரமிப்பு செய்வோருக்கு, இது சாதகமாக உள்ளதாக ராதாகிருஷ்ணன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு, நீதிபதிகள் சேஷசாயி, சத்தியநாராயணன் அமர்வு கூறியது. இதைத் தொடர்ந்து, கோயிலுக்கு தேவைப்படாத நிலங்களை ஏழை மக்களுக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. ஆட்சேபத்துக்கு உரிய புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்கள் மீட்கப்படும் என்று கூறியுள்ளது. கோயிலுக்கு தேவையில்லாத நிலங்களை ஏழைகளுக்கு வழங்குவது குறித்தும், அந்த நிலத்துக்கான விலையை கோயிலுக்கு செலுத்தவும் பரிசீலித்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது.