தொழில் நகரத்தில் பரவும் மர்ம காய்ச்சல் - 5 வயது சிறுமி பலி

தொழில் நகரமான திருப்பூரில் மர்ம காய்ச்சல் வேகமான பரவி வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Update: 2019-10-22 08:24 GMT
தமிழக அளவில் பல மாவட்ட மக்களும், வெளி மாநில மக்களும் அதிக அளவில் வசித்து வரும்  திருப்பூரில் கடந்த சில வாரங்களாக மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மாவட்டத்தின் முக்கிய நகரங்களான தாராபுரம், உடுமலைபேட்டை மற்றும் அவினாசி அரசு மருத்துவமனைகளில் தினசரி 500 பேர் வரை புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று  வருகின்றனர். 

இந்த மருத்துவனைகளில் சுமார் 100 பேர் வரை உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் நோயாளிகளின் வருகை  அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, மடத்துக்குளம் அடுத்த வேடபட்டியை சேர்ந்த சர்மிளா பானு என்பவரது 5 வயது குழந்தை ரம்ஜான் பாத்திமா மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

காய்ச்சல் அறிகுறி தென்பட்டதும் அருகில் உள்ள அரசு மருத்துமனைக்கும் அதன் பின்னர்  பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கும் குழந்தை ரம்ஜான் பாத்திமாவை கொண்டு சென்றுள்ளனர்.

அதன் பின்னர்,  கோவை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துள்ளது. 

ஆனால் குழந்தை மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக இறப்பு சான்றிதழ் வழங்கப்படுள்ளதால் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.  

மர்ம காய்ச்சலுக்கு  5 வயது குழந்தை பலியான நிலையில்  உயிரிழப்புகளை தடுக்க கிராமபுற மருத்துவமனைகளிலும் தரமான சிகிச்சை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்