கோவையில் கள்ள ரூபாய் நோட்டு கும்பலை சேர்ந்த 4 பேர் கைது

கோவையில் தீபாவளி பண்டிகையின் போது கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட திட்டமிட்டிருந்த கும்பலை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-13 16:31 GMT
கோவை காந்தி பார்க் பகுதியில் ஸ்டேஷனரி கடை நடத்தி  வரும் ஜான் ஜக்கோ என்பவரிடம் 2 பேர், நூறு ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்றனர். அவர்களை  ஜான் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிடித்து  போலீசில் ஒப்படைத்தார். இருவரிடமிருந்து 31 நூறு ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிரவீன் மற்றும் பூபதி  என்ற அந்த இருவரும்,  கோவை இடிகரையை சேர்ந்த  தன்ராஜ் அச்சடித்து தந்த கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது விசாரணையில் தெரிய வந்தது. கோவை கணபதியை சேர்ந்த ரஞ்சித்தும்  கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கும்பல் தீபாவளியின் போது  பெண்கள் மற்றும்  வயதானவர்களிடம் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற திட்டமிருந்ததாக விசாரணையில் தெரிவித்தனர்.   இதையடுத்து  தன்ராஜ் மற்றும் ரஞ்சித்தை கைது செய்த தனிப்படை போலீசார், சுமார் பதினொன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளையும், அவற்றை அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட  இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனர். இந்த கும்பலை சேர்ந்த  மேலும் 2 பேரை தேடி வருவதாக தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்