பிரதமர் மோடி சீன அதிபர் வருகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்
பிரதமர் மோடி சீன அதிபர் வருகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெள்ளி, சனிக்கிழமைகளில் சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை, கத்திப்பாரா முதல் சின்னமலை வரை, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, ராஜிவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் போக்குவரத்து தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட சாலைகளில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள சென்னை பெருநகர் போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கனரக, சரக்கு, இலகு ரக, டேங்கர் லாரிகள் போன்ற வாகனங்கள் 2 நாட்களும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மேல் குறிப்பிட்ட சாலைகளில் அனுமதிக்கப்பட மாட்டாது. தேசிய விருந்தினராக சென்னை வருகை புரியும் முக்கிய பிரமுகரின் இந்திய பயணம் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் அமைந்திட பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.