சீன அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு : திபெத்திய போராட்டக்குழு தலைவர் சென்னையில் கைது
சீன அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த இருந்த திபெத்திய போராட்டக்குழு தலைவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடிக்கு இடையேயான சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளதை அடுத்து, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. உளவுத்துறை போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி, டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த 8 திபெத்திய மாணவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அளித்த தகவலின் பேரில், போராட்டத்தை ஒருங்கிணைத்த போராட்டக்குழு தலைவர் டென்சில் நோர்பு கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலவாக்கம் அருகே தங்கியிருந்த டென்சில், தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. மேலும், சென்னையில் உள்ள திபெத்திய நாட்டை சேர்ந்த 60 பேரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.