பெண் விரிவுரையாளர் கடத்தல் வழக்கு : வணக்கம் சோமு-வை தேடும் போலீஸ்
பெண் விரிவுரையாளர் கடத்திய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, அ.தி.மு.க பகுதி பொறுப்பாளராக இருந்த வணக்கம் சோமு-வை தேடி தனிப்படை போலீஸ் குற்றாலம் விரைந்துள்ளது.
அதிமுக மலைக்கோட்டை பகுதி பொருளாளரும், அமராவதி கூட்டுறவு சங்கத் தலைவராகவும் பதவி வகித்தவர் 'வணக்கம்' சோமு. ஒரு தலை காதல் காரணமாக, தனியார் கல்லூரியின் பெண் விரிவுரையாளர் மகாலட்சுமியை காரில் கடத்தியதாக கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அ.தி.மு.க பிரமுகர் வணக்கம் சோமு உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக உள்ள அ.தி.மு.க பிரமுகரை தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வணக்கம் சோமு-வை தேடி தனிப்படை போலீசார் குற்றாலத்திற்கு விரைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, வணக்கம் சோமுவை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர்.