டி.என்.பி.எல். கோரிக்கை - பி.சி.சி.ஐ. மனம் மாறுமா?
வெளிமாநில வீரர்களுக்கான தடையால், டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பிசிசிஐ மனம் மாறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உலக கிரிக்கெட் போட்டிகளுக்கு எப்படி ஐ.பி.எல்.லோ அதுபோல தான், இந்திய கிரிக்கெட் போட்டிகளுக்கு டி.என்.பி.எல் உருவெடுத்துள்ளது. ஐபிஎல்-லில் ஒவ்வொரு அணியிலும் 8 வெளிநாட்டு வீரர்களை சேர்க்க முடியும். ஒவ்வொரு போட்டியிலும் அணிக்கு 4 வெளிநாட்டு வீரர்கள் விளையாட முடியும்.
ஆனால் டி.என்.பி.எல். தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க பி.சி.சிஐ. தொடர்ந்து மறுத்து வருகிறது. அதாவது ஐபிஎல்லுக்கு அளிக்கப்படும் உரிமைகள் டிஎன்பிலுக்கு வழங்கப்படுவதில்லை. வெளிநாட்டு வீரர்கள் மட்டுமல்ல, வெளிமாநில வீரர்களையும் டிஎன்பிஎல்லில் விளையாட அனுமதிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிடிவாதமாக மறுத்து வருகிறது. கர்நாடக பிரிமீயர் லீக் மற்றும் டி20 மும்பை லீக் போட்டிகளுக்கும் இதேபோல் அனுமதி மறுக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை விட பிசிசிஐ மேலானதா என்று நிபுணர்களும், டி.என்.பி.எல். பங்குதாரர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தியாவை சேர்ந்த ஒரு வீரரை, எந்த அடிப்படையில் விளையாட தடுக்கிறார்கள் என்றும் இங்கே கேள்வி எழுகிறது.
இந்நிலையில் நாட்டின் ஒரு பகுதியை சேர்ந்த குடிமகன், மற்றொரு பகுதியில் வேலையில் சேர முடியாது என்று அர்த்தமா? என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் எந்த ஒரு குடிமகனும் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் வேலைக்கு செல்ல முடியும், யாரிடமும் அனுமதி வாங்க வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். டி.என்.பி.எல். போட்டிகளில் வெளிமாநில வீரர்களை அனுமதிக்க, பிசிசிஐ இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்பது எங்களுக்கு ஏமாற்றமாக இருப்பதாக டிஎன்பிஎல்லின் நிர்வாக குழு தலைவர் பி.எஸ்.ராமன் தெரிவித்துள்ளார். அடுத்த டிஎன்பிஎல் தொடர் தொடங்கும் முன் இந்த விவகாரத்தில் தெளிவு கிடைக்கும் என்றும் அவர் நம்புகிறார். ஒவ்வொரு அணிக்கும் 4 வெளிமாநில வீரர்கள் என்று அனுமதித்தால், 32 வீரர்களின் திறமையை நிரூபிக்க வாய்ப்பாக அமையும் என்றும், இந்த எளிய விஷயத்தை எடுத்து சொல்லியும் பிசிசிஐ நிர்வாகிகள் புரிந்து கொள்ளவில்லை என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் இணை செயாளர் பழனி தெரிவித்துள்ளார்.