கல்வி பயில வீட்டையே அளித்த பூக்கடைக்காரர்
பொதுவாக வீட்டு கட்டி குடியேற வேண்டும் என்பது தான் அனைவரின் கனவாக இருக்கும் ஆனால் வீட்டை கட்டி அதனை பள்ளி மாணவர்களுக்காக விட்டு கொடுத்த பூக்கடைகாரரின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே நொச்சிவயல்புதூரை சேர்ந்தவர் தியாகராஜன். பூக்கடை வைத்து வியாபாரம் நடத்தி வரும் இவர் செய்த செயல் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அங்குள்ள ஊராட்சி துவக்கப்பள்ளியின் கட்டடம் சிதிலமடைந்ததால் அதை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுத்தது.
இதனால், அமர்ந்து படிப்பதற்கு இடம் இல்லாமல் மாணவர்கள் தவித்து வந்தனர். பள்ளி தலைமையாசிரியோ வாடகைக்கு ஏதாவது கட்டடம் கிடைத்தால் மாணவர்கள் தடையின்றி கல்வி கற்க ஏதுவாக இருக்கும் என சிலரிடம் முறையிட்டுள்ளார்.
இந்த தகவலை அறிந்த பூக்கடைக்காரர் தியாகராஜன், தன்னுடைய புதிய வீட்டை தற்காலிகமாக பயன்படுத்தி கொள்ள அனுமதித்துள்ளார்.
இதற்காக பள்ளி நிர்வாகம் மாதந்தோறும் வாடகை தருவதாக தெரிவித்த போதும் கூட , எனக்கு வாடகை வேண்டாம் மாணவர்கள் பாதுகாப்புடன் நல்ல சூழலில் படித்தால் போதும் என கூறியுள்ளார், தியாகராஜன்.
பள்ளி மாணவர்கள் கல்வி பயில வீட்டை விட்டு கொடுத்ததோடு மட்டும் அல்லாமல், மின் கட்டணத்தையும், அவரே செலுத்தி வருகிறார். கடந்த ஓராண்டாக கல்வி கூடத்திற்கு தனது கனவு இல்லத்தை கொடுத்த இவருடைய செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
அரசு துவக்கப் பள்ளியில் பயின்ற தியாகராஜன், மாணவர்களின் இன்னலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, வீட்டை தந்ததாக கூறியுள்ளார். மாணவர்களின் கல்விக்காக வீட்டை கொடுத்ததை பாக்கியமாக கருதுவதாகவும் பெருமிதத்துடன் தெரிவிக்கிறார், தியாகராஜன்.