இளம்பெண் சுபஸ்ரீயின் எப்.ஐ. ஆர் : முக்கிய அம்சங்கள்
இளம்பெண் சுபஸ்ரீயின் உயிரிழப்பு குறித்த முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களை பார்க்கலாம்.
சுபஸ்ரீயின் தந்தை ரவி புகார் கொடுத்தவராக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த புகாரில், பள்ளிக்கரணை 200 அடி ரேடியல் சாலையில், சுபஸ்ரீ வந்துகொண்டிருந்தபோது, சாலையில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சியின் பேனர் ஒன்று, திடீரென அவர் மீது விழுந்ததில் நிலை தடுமாறி வண்டியுடன், சுபஸ்ரீ கீழே விழுந்ததாக கூறப்பட்டுள்ளது.
அப்போது பின்னால் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வந்த டேங்கர் லாரி அவர் மீது மோதியதில் வலது தோள், இடது பக்க வயிறு மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடனே அங்கிருந்தவர்கள் ஒரு வாகனத்தில் அவரை ஏற்றி, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுபஸ்ரீ உயிரிழப்பில், குற்றம் சாட்டப்பட்டவர்களாக, டேங்கர் லாரி ஓட்டுனர் மற்றும் பேனர் வைத்த நபர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இ.பி.கோ.279-ன்படி, அதிகபட்சமாக 6 மாதம் சிறை வழங்கும் அஜாக்கிரதையாக, வாகனம் ஓட்டுதல்,
இ.பி.கோ. 336 -ன்படி அதிகபட்சமாக 3 மாத சிறை வழங்கும், மற்றவர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயல் மற்றும்
இ.பி.கோ. 304(ஏ)-ன்படி, அதிகபட்சமாக 2 வருட சிறை தண்டனை தரும், கவனக்குறைவால் மரணம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.