107 வயதிலும் ஆச்சரியப்படுத்தும் அற்புத மனிதர் தேவராஜ்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், தேனீக்கள் போன்று, சுறுசுறுப்பாக வேலை செய்யும், இந்த முதியவரை பார்த்து, பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் வியந்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், தேனீக்கள் போன்று, சுறுசுறுப்பாக வேலை செய்யும், இந்த முதியவரை பார்த்து, பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் வியந்து வருகின்றனர். காரணம், இவருக்கு வயது 107. அண்ணா நகரை சேர்ந்த இந்த முதியவர், தேவராஜ், 1912ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி பிறந்தவர். இவர், தற்போது தனியார் மேல்நிலைப்பள்ளியில் சமையலர் ஆக பணிபுரிந்து வருகிறார். 107 வயதிலும் சுறுசுறுப்பாக பணியாற்றும் தேவராஜ், காலை 6 மணிக்கு தமது இல்லத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் நடந்து வந்து பள்ளியில் பணிபுரிந்து விட்டு பின்னர் மீண்டும் மாலை 5 மணிக்கு நடந்தே வீடு திரும்புகிறார். இவருக்கு 7 ஆண்கள், 7 பெண்கள் என 14 குழந்தைகள். 38 பேரப்பிள்ளைகள், 14 கொள்ளுப் பேரப் பிள்ளைகள். ஆனாலும், உழைக்கத் தயங்கவில்லை, தேவராஜ். சிறு வயது முதலே அதிகாலை 5 மணிக்கு எழுந்து, பிரார்த்தனை செய்துவிட்டு பின்னர் வேலை செய்யும் இடத்திற்கு சென்று, பணிகளை மேற்கொள்கிறார். இதுவரை தனக்கு எந்த உடல்நலக் குறைவும் ஏற்பட்டது இல்லை என்கிறார், 107 வயதான தேவராஜ். தேவராஜ் பணியாற்றும் பள்ளியின் தாளாளர் குரியன் ஆபிரகாம் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக தங்கள் பள்ளியில் பணிபுரியும் தேவராஜ் சுவையான உணவுகளை தயாரித்து வழங்குவதாக பாராட்டு தெரிவித்தார். 100 வது ஆண்டு பிறந்த நாளில் இவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் விடுமுறை எடுக்காமல், தமது பணிகளை செய்யும் முதியவர் தேவராஜ் பாராட்டுக்குரியவர் மட்டுல்ல வணங்குதலுக்கும் உரியவர் என்று இப்பகுதிவாசிகள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.