ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு
ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட கல்லிடைக்குறிச்சி கோயிலுக்கு சொந்தமான 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நடராஜர் சிலை இன்று சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.
சேரமன்னர்களால் கட்டப்பட்ட குலசேகரமுடையார் கோயிலிருந்து 1982 ஆம் ஆண்டு நடராஜர் உள்பட ஐந்து ஐம்பொன் சிலைகள் கடத்தப்பட்டது. நீண்ட காலமாகியும், போலீசாரால் இந்த சிலையை கண்டுபிடிக்க முடியவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், சிலை கடத்தல் சிறப்பு புலனாய்வு குழு, இந்த வழக்கை கையில் எடுத்தது.
தீவிர விசாரணையில், நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் காட்சி படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. பல தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் அருங்காட்சியகத்தில் இருப்பது இந்தியச் சிலை தான் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து,1982இல் சிலை காணாமல்போனது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை, புகைப்படங்கள் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்திடம் கொடுக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதரக அதிகாரிகள் மூலம், அருங்காட்சியகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பல கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட கல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலை, டெல்லி கொண்டு வரப்பட்டது. அந்த சிலையை சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு பெற்றுக் கொண்டது. டெல்லியில் இருந்து ரயில் மூலம் அந்த சிலை இன்று சென்னை கொண்டு வரப்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், அந்த நடராஜர் சிலையை திறந்து பூஜை செய்ய சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் அனுமதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, நடராஜர் சிலைக்கு பாரம்பரிய உரிமை உடையோர் பூஜை செய்ய, மக்கள் ஆர்வமுடன் வரிசையாக சென்று வழிபட்டனர்.
சிறப்பு பூஜைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல், கல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலையை மீட்க முதல் காரணம் நீதிமன்றங்களும், ஊடகங்களும் என்று குறிப்பிட்டதுடன், நன்றி தெரிவித்தார்.
கல்லிடைகுறிச்சி சிலை மீட்கப்பட்ட விதம் குறித்து விளக்கம் அளித்த பொன்.மாணிக்கவேல், காட்சிப் பொருளாக இருக்கும் சிலைகளை மீட்க நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்தார்.
37 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் கொண்டுவரப்பட்ட நடராஜர் சிலை கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் முறையாக ஒப்படைக்கப்பட உள்ளது. பின்னர் உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை குலசேகரமுடையார் கோயிலுக்கு கொடுக்கப்படும் என சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தெரிவித்துள்ளனர்.