அங்கீகாரம் இல்லாத மேல்நிலைப்பள்ளிகள் : தேர்வு எழுத அனுமதி இல்லை - தேர்வுத்துறை
அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என தேர்வுத்துறை இயக்குநரகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
தேர்வுத்துறை இயக்குர் உஷாராணி, இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். பதினோராம் வகுப்பு நடத்தக் கூடிய புதிய பள்ளிகள் அங்கீகாரம் பெற்றுள்ளதா இல்லையா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் விவரங்களை வரும் 30ஆம் தேதிக்குள் தேர்வுத்துறை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உஷாராணி அறிவுறுத்தியுள்ளார். மேலும் இந்த தகவலை உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஏராளமான பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் 11 ஆம் வகுப்பு நடத்தி வருவதாக புகார் வந்ததன் காரணமாக, தேர்வுத்துறை இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.