தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : "தேவைப்பட்டால் ரஜினியிடம் விசாரிப்போம்"
13 பேர் கொல்லப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து, நடிகர் ரஜினியிடம் விசாரிக்க வாய்ப்புள்ளதாக ஒருநபர் ஆணைய வழக்கறிஞர் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்13 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக, விசாரித்து வரும் ஒருநபர் ஆணையம், 14வது கட்ட விசாரணையை முடித்துள்ளது. இதுவரை 379 பேரிடம் நடத்திய விசாரணையில், 555 ஆவணங்களை பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, அமைப்புகள் மற்றும் ரிட் மனு தாக்கல் செய்தவர்களிடம் ஆணையம் விசாரிக்க உள்ளது. இந்நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிறகு ஆறுதல் சொல்ல சென்ற நடிகர் ரஜினி, சமூக விரோதிகள் தூத்துக்குடியில் ஊடுருவி இருப்பதாக கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும் போது இதைக் கூறிய அவர், தமக்கு தெரியும் என்று ஆவேசமாக பேசியிருந்தார். இந்நிலையில், தேவை ஏற்பட்டால், நடிகர் ரஜினியிடம் விசாரிக்கப்படும் என ஒருநபர் ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் தெரிவித்துள்ளார்.