தண்ணீர் இல்லாமல் களையிழந்த ஆடிப்பெருக்கு
தமிழகத்தில் வறண்டு போன நீர்நிலைகளில், ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் களையிழந்து காணப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில், காவிரி ஆறு குட்டை போல் காட்சி அளித்தால், அங்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும், குறைந்த அளவிலான தண்ணீரில் புனித நீராடி, காவிரி அன்னைக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி ஆற்றில் தண்ணீர் வராததால், பொதுமக்கள் போர்வெல் நீரில் புனித நீராடி ஆடிப்பெருக்கை கொண்டாடினர். ஒரு சிலர், தண்ணீர் இல்லாத காவிரியில் புனித நீராட முடியாமல் வருத்தத்துடன் திரும்பி சென்றனர். அதேசமயம், துலாக்கட்டக்காவிரியில் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டது.
தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரியில் ஆற்றில் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்து பொதுமக்கள் ஆடிப்பெருக்கை கொண்டாடினர். புதுமண தம்பதிகள் வருகை முற்றிலும் குறைந்து திருவையாறு படித்துறை களையிழந்து காட்சி அளிக்கிறது.
கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள், நொய்யல் ஆற்றில் தண்ணீர் இல்லாததால் முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியாமல் சிரமப்பட்டனர். கிணறு மற்றும் குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.