பிரபல தனியார் நிறுவனத்தின் உயர் பதவியில் திருநங்கை...

கேலி கிண்டல்களுக்கு செவி சாய்க்காமல் தனது திறமையால் இன்று பிரபல நிறுவன​த்தின் உயர் பதவியில் அமர்ந்துள்ள திருநங்கை கடந்த வந்த பாதை குறித்து விவரிக்கிறது, இந்த தொகுப்பு....

Update: 2019-07-22 02:26 GMT
உணவு டெலிவரி செய்யும் பிரபல செல்போன் செயலி "சுவிக்கி". இதன் முதன்மை தொழில் திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார், தமிழகத்தை சேர்ந்த திருநங்கை சம்யுக்தா விஜயன். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த சம்யுக்தா, இத்தகைய உயரங்களை தொடுவதற்கு முக்கிய பங்காற்றியது, பெற்றோரின் அரவணைப்பு ஆதரவுமே காரணம் என்கிறார். தனக்குள் இருக்கும் பெண்மை குணங்களால் சிறு வயது முதலே பல்வேறு கேலி, கிண்டல்களுக்கு ஆளானாலும், அவற்றிற்கு செவிக்கொடுக்காமல் தனது முழு கவனத்தையும் படிப்பிலேயே செலுத்தியதாக கூறுகிறார், சம்யுக்தா.

கல்லூரியில் படிக்கும்போதே பெரிய நிறுவனத்தில் அதிக சம்பளத்திற்கு தேர்வாகி ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் இவர் பணியாற்றியிருக்கிறார். வெளிநாடுகளில் திருநங்கைகளுக்கு கிடைக்கும் ஆதரவால் தனக்குள் பெரும் தன்னம்பிக்கை பிறந்ததாக கூறும் இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு பெண்ணாக மாற அறுவை சிகிச்சை செய்துவிட்டு, இந்தியா திரும்பினார். தன்னை முதல் முறையாக பெண்ணாக பார்த்த பெற்றோர் முழு மனதுடன் தன்னை ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி, உறவினர்களிடம் எங்களது பெண் பிள்ளை என்று அறிமுகம் செய்ததாக பூரிப்புடன் தெரிவிக்கிறார், சம்யுக்தா.

இந்தியா திரும்பியதும் டவுட் ஸ்டூடியோ என்கிற பெயரில் ஆடை நிறுவனம் தொடங்கி திருநங்கைகளுக்கு வாய்ப்பு அளித்து வந்துள்ள இவர், படிப்பு மற்றும் திறமை குறைப்பாட்டால் திருநங்கைகள் பிச்சை மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக வேதனை தெரிவிக்கிறார். அரசு உதவினாலும் பொதுமக்கள் திருநங்கைகளை ஏற்க மறுத்து புறப்பணிப்பது வேதனை அளிக்கிறது என்கிறார், சம்யுக்தா. திருநங்கைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களுக்கு மனோரீதியான ஆலோசனைகளை வழங்க அரசு முன்வர வேண்டும் என்பதே இவரது பெரும் எதிர்ப்பார்ப்பு.

உரிமைகளும் வாய்ப்புகளும் இல்லாமல் தவிக்கும் திருநங்களுக்கான இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தும் சம்யுக்தா, அப்போதுதான் வீட்டிற்கு பயந்து திருநங்கைகள் ஓடி, தடம் மாறுவது தடுக்கப்படும் என்கிறார், சம்யுக்தா. தனக்கு கிடைத்த அரவணைப்பு,  தன்னை போன்ற திருநங்கைகளுக்கு கிடைத்தால் அவர்களும் பல உயரங்களை அடைவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கிறார், சம்யுக்தா. 
Tags:    

மேலும் செய்திகள்