சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி பேசினார். அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு போதிய வசதிகளை அரசு செய்து கொடுக்கவில்லை என்றும், வெளிநாட்டில் உள்ள சிலையை மீட்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைத்தார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, பல்வேறு நிலைகளில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு , 204 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார். மேலும் 600 விழுக்காடு அளவிற்கு காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த முதல்வர், அந்த பிரிவுக்காக 22 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது என்றும் முதல்வர் விளக்கம் அளித்தார்.