'ராமர் நீல நிற' பட்டாடையில் காட்சியளிக்கும் அத்தி வரதர்
காஞ்சி அத்திவரதர் உற்சவத்தின் 19வது நாளான இன்று, ராமர் நீல நிற பட்டாடையில் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி தந்து வருகிறார்.
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 48 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தின் 19வது நாளான இன்று, அத்திவரதர் ராமர் நீல நிற பட்டாடை உடுத்தி, பஞ்சவர்ண மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தந்து வருகிறார். உற்சவத்தில் கடந்த 18 தினங்களில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து சென்றுள்ளனர்.
பெருமாளுக்கு உகந்த திருவோணம் நட்சத்திரம் என்பதால், நேற்று ஒரே நாளில் மட்டும் 3 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இதனால் நேற்று காஞ்சிபுரம் நகரமே பக்தர்களாலும், வாகனங்களாலும் திக்குமுக்காடியது. இந்நிலையில், நேற்றைய கூட்டத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது.
இன்று முதல் அத்திவரதரை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள மூலவரை தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். முக்கிய பிரமுகர் வரிசையில் வருபவர்கள் மாலை 6 மணி வரை மட்டுமே தரிசனம் செய்யலாம் என்றும், மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரையில் ஸ்பீடு தரிசனம் அடிப்படையில், 300 ரூபாய் சிறப்பு கட்டணத்தில் அத்திவரததை தரிசனம் செய்யலாம் என்றும் ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார். 300 ரூபாய் சிறப்பு கட்டண நுழைவுசீட்டு ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு, நாள் ஒன்றுக்கு 500 பேருக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்தார். இந்நிலையில், அத்திவரதரை தரிசனம் செய்ய நினைக்கும் முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், நோய்வாய்ப்பட்டவர்கள் தங்களது பயண திட்டங்களை பக்தர்கள் குறைவாக உள்ள வார நாட்களில் வைத்து கொள்ள மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.