ஆவின் பால் வினியோகம் செய்யும் டேங்கர் லாரிகளுக்கான டெண்டர் ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்
ஆவின் பால் வினியோகம் செய்யும் டேங்கர் லாரிகளுக்கான டெண்டரை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆவின் பால் சப்ளை செய்ய, 312 டேங்கர் லாரிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் கடந்த ஜனவரியில் டெண்டர் கோரியது. இந்த டெண்டரை ரத்து செய்யக்கோரி ஸ்ரீதேவ் டிரான்ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த மனுவில், தேர்தல் அறிவித்த பின்னர் பால் சப்ளை செய்ய டெண்டர் கோருவது தவறு எனக் கூறப்பட்டிருந்தது. அதே போல 5 ஆண்டுகளில் தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் ஆவின் நிறுவனத்திற்கு பால் சப்ளை செய்த நிறுவனங்களே இந்த டெண்டரில் பங்கேற்க முடியும் என்ற நிபந்தனையை எதிர்த்து தீபிகா ட்ரான்ஸ்போர்ட்ஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், தேர்தல் அறிவிப்புக்கு பிறகு டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது சட்டவிரோதம் என கூறி டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டார். அதே நேரம், 3 ஆண்டுகள் ஆவின் நிறுவனத்துக்கு பால் சப்ளை செய்தால் தான் டெண்டரில் பங்கேற்க முடியும் என்ற நிபந்தனையை உறுதி செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.