வீட்டில் மாடித்தோட்டம் - இயற்கையான முறையில் காய்கறிகளை விளைவிக்கும் தம்பதி
சென்னை போன்ற மாநகரங்களில் மாடித்தோட்டம் தொடர்ந்து பிரபலமாகி வருகிறது.
சென்னை திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் மேம்பாலம் அருகே வசிப்பவர்கள் சிவக்குமார் மாரீஸ்வரி தம்பதியினர். போதிய இடவசதி இல்லாததால், வீட்டில் செடிகளை வளர்க்க முடியவில்லையே என்ற கவலையில் இருந்தவர்கள், தங்களுடைய கனவை வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து, நனவாக்கி கொண்டனர். வீட்டில் சமைக்கும் உணவு வகைகள் மீதமானால் அதனை குப்பையில் கொட்டாமல் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்துகின்றனர். மீதமான சாதம் மற்றும் காய்கறி முட்டை கீரை வகைகள் அனைத்தையும் காயவைத்து இயற்கை உரமாக்கி செடிகளுக்கு பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர். எளிதில் கிடைக்கும் தக்காளி பெட்டிகள், வெங்காய கூடைகளை செடிகள் நட்டுவைப்பதற்கு தொட்டிகளாகப் பயன்படுத்தி, கத்திரிக்காய் வெண்டைக்காய், தக்காளி போன்ற காய்கறிகளையும், கீரை வகைகளையும் பயிரிட்டுள்ளனர். இயற்கையான முறையில் வீட்டிலேயே விளையும், காய்கறிகளை, உண்பதால் உடல் ஆரோக்கியம் காக்கப்படுவதாக பெருமிதம் தெரிவிக்கின்றனர். தினமும் காலை மாலை இரு வேளையும் தண்ணீர் ஊற்றி, தொட்டிகளை சுத்தம் செய்வது எளிதானதுதான் என்று கூறும் இவர்கள், மாடித்தோட்டம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுவருகின்றனர். சுற்றுச்சூழல் மாசு நிறைந்த வடசென்னை பகுதியில் மாடி தோட்டம் அமைத்திருக்கும் இவர்களின் முயற்சியை அப்பகுதிவாசிகள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.