சென்னை : காவலர்களுடன் தகராறில் ஈடுபட்ட இளைஞர் சிறையிலடைப்பு
குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தி விட்டு, போலீசாரையும் ஆபாசமாக பேசிய இளைஞர், சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் தாறுமாறாக ஓடிய கார் ஒன்று, ஆட்டோவில் மோதிய பின், மின் கம்பத்தில் மோதி நின்றது. காரை ஓட்டி வந்த இளைஞரிடம் போலீசார், விசாரணை நடத்த முயன்ற போது அவர், சிறப்பு உதவி ஆய்வாளர் பழனி மற்றும் தலைமை காவலர் இளவரசன் ஆகியோரை தகாத முறையில் பேசி, தாக்க முற்பட்டார். அங்கு வந்த சாஸ்திரி நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இளைஞர் மீது, குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக, வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், நீலாங்கரை போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தது, ஆபாசமாக பேசியது, அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். கைதான இளைஞர் நவீன், மதுரையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் புகழேந்தியின் மகன் என்பது தெரியவந்துள்ளது.