குரூப்-1 தேர்வு முடிவை ரத்து செய்யக் கோரி மனு - ஜூன் 17க்குள் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
குரூப்-1 தேர்வு முடிவை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், வரும் 17ஆம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட குரூப் ஒன் முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி வெளியானது. இதனை ரத்து செய்யக் கோரி சென்னையை சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட தேர்வாளர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு நீதிபதி பார்த்திபன், முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான டிஎன்பிஎஸ்சி தரப்பு வழக்கறிஞர், 200 வினாக்களின் 24 கேள்விகள் தவறானது என ஒப்புக்கொண்டு, இது குறித்து விளக்கம் அளிக்க கால அவகாசம் தேவை என முறையிட்டார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, மிகவும் முக்கியம் வாய்ந்த குரூப் ஒன் தேர்வில், குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது எனக் கூறினார். இந்த மனு தொடர்பாக, ஜூன் 17ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி க்கு நீதிபதி உத்தரவிட்டார்.