தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் - ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட மானிய கோரிக்கை மீது விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தாமல் இருப்பதால் அரசு துறை பணிகளில் தேக்கநிலை ஏற்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.மக்கள் பிரதிநிதிகளின் குரல் ஒலிக்க , பேரவையை கூட்டுவதற்கே பிரதான எதிர்க்கட்சி குரல் எழுப்ப வேண்டிய நிலை ஏற்படுவதாக அந்த அறிக்கையில் ஸ்டாலின் விவரித்துள்ளார். தமிழகத்தில் தற்போது நிலவும் பல்வேறு சூழ்நிலைகளை பட்டியலிட்டுள்ள ஸ்டாலின், அதுகுறித்து விவாதிக்க உடனடியாக பேரவையை கூட்டிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தொடுக்கும் கேள்வி கணைகளால் எழுந்துள்ள நிச்சயமற்ற அரசியல் சூழ்நிலை காரணமாக பேரவையை கூட்டுவதற்கு , முதலமைச்சர் பயம் கொண்டால், ஆளுநர் தலையிட்டு பேரவையை கூட்டிட வேண்டும் என்று அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.பேரவையை கூட்டுவதை மேலும் தள்ளிப்போடுவது தேவையற்ற குழப்பங்களுக்கும் நெருக்கடிக்கும் வழிவகுத்து விடும் என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.