தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரம்ஜான் கொண்டாட்டம்...
ரம்ஜான் பண்டிகை இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மதுரை தமுக்கம் மைதானம், அரசரடி ஆகிய முக்கிய நகர் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
திருச்சி
இதேபோல், திருச்சியில் உழவர் சந்தை, சையது முர்துஷா, ஈத்கா மைதானம், ஜெய்லானியா பள்ளிவாசல், சவுக் பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தொழுகை நடத்தினர்.
சேலம்
சேலம் அரபிக் கல்லூரி வளாகத்திலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மசூதிகளிலும் இஸ்லாமியர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் அனைத்து மசூதிகள் முன்பும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கோவை
கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள திப்பு சுல்தான் பள்ளிவாசல் மைதானத்தில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகையை மேற்கொண்டனர்.
திருப்பூர்
திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளியில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற சிறப்பு தொழுகையில் சிறுவர்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்
இதேபோல், ரம்ஜான் பண்டிகையை ஒட்டி திண்டுக்கல் பேகம்பூர் பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
தூத்துக்குடி
மேலும், தூத்துக்குடியில் உள்ள ஈத்கா திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் அரசு காஜி முஜிபுர் ரஹ்மான் கலந்து கொண்டார். உலக மக்கள் சுபிட்சமாக வாழ், நாடு வளம்பெற மழை வேண்டி சிறப்பு தொழுகை செய்யப்பட்டது.
கடலூர்
கடலூர் மஞ்சக்குப்பம் டவுன்ஹாலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பாக சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த தொழுகையில் ஆண்களும், பெண்களும் நகர அரங்கில் கூடி தனித்தனியாக தொழுகையில் ஈடுபட்டனர். மேலும் ரம்ஜானின் சிறப்பு பற்றிய சொற்பொழிவும் இதில் நடைபெற்றது.
சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் ரம்ஜான் பண்டிகை : தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா கருத்து
ரம்ஜான் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லா, சென்னை பாரிமுனை பகுதியில் நடந்த தொழுகையில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடிநீர் பஞ்சம் நீங்க இறைவனை பிரார்த்தனை செய்ததாக தெரிவித்தார்.
ரம்ஜான் பண்டிகை - உற்சாக கொண்டாட்டம் : சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்
புதுச்சேரியில் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் உள்ள குப்தா பள்ளி, சுல்தான்பேட்டை மற்றும் காரைக்காலில் உள்ள பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில், காலை 7 மணி முதல் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை செய்தனர். அனைத்து பள்ளி வாசல்களிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டதால், ஏராளமான போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
ஹமிதியா மசூதி- இஸ்லாமியர்கள் கூட்டுத் தொழுகை
ரம்ஜான் திருநாளை முன்னிட்டு மும்பையில் உள்ள ஹமிதியா மசூதியில் ஏராளமான இஸ்லாமியர்கள் கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர். சிறுவர், சிறுமியர், இளைஞர்கள், பெரியவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் புத்தாடை அணிந்து மசூதிக்கு வந்தனர். மசூதி மற்றும் அதை ஒட்டிய சாலை நெடுகிலும் அமர்ந்த இஸ்லாமியர்கள், அல்லாவை தொழுதனர். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி அன்பையும், சமாதானத்தையும் பரிமாறிக்கொண்டனர்.
ரம்ஜான் - முதலமைச்சர் நிதிஷ்குமார் வாழ்த்து : குழந்தைகள், பெரியவர்கள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சி
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகை கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். குழந்தைகளை தமது இருக்கையில் அமர வைத்த சிறிது நேரம் நின்ற அவர், இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். புத்தாடை அணிந்து வந்த சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் அமர்ந்து தொழுகையில் ஈடுபட்டது வண்ண மயமாக இருந்தது. பின்னர், அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.