சித்தாலப்பாக்கம் ஊரட்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் ஊரட்சியில் குடிநீர் கேட்டு பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-01 19:59 GMT
இந்த பகுதியில்  தினந்தோறும் குழாய் மூலம் ஊராட்சி நிர்வாகம் தண்ணீர் வினியோகித்து வந்தது.  குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்குவதற்காக ஊராட்சி பகுதியில் 10 திறந்தவெளி கிணறுகள் மற்றும் 30 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இவை அனைத்துமே தண்ணீர் வற்றியதால் கடந்த 1 மாதமாக குழாய்களில் தண்ணீர் விடுவது நிறுத்தப்பட்டது.  இதனால் என். எஸ். கே. தெரு, வரதராஜ பெருமாள் கோயில் தெரு, மகேஸ்வரி நகர், தேசிய அவென்யூ, விவேகானந்தர் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உட்பட பல்வேறு பகுதிகளில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் குடிநீர் வழங்க வலியுறுத்தி நேற்று ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் ஊராட்சி அலுவலகம் எதிரே ஒட்டியம்பாக்கம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி  தகவலறிந்தும்  பள்ளிக்கரணை போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் சமாதானம் பேசி சாலை மறியலை கைவிட வைத்தனர். பின்னர் ஊராட்சி அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த  வைத்தனர். அங்கு ஊராட்சி அலுவலர்கள்   தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்