கோடை வெயிலை சமாளிக்க 'பீர்'...

உடல் வெப்பத்தை தணிக்க பழங்கள், பழரசங்கள் என ஆரோக்கிய உணவுகள் தீர்வாக இருந்தாலும், குடிமகன்களோ உடல் சூட்டை குறைக்க பீர் குடிக்கலாம் என டாஸ்மாக் கடைகளில் தஞ்சம்.

Update: 2019-05-15 05:57 GMT
கத்தரி வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர் மக்கள்.  உடல் வெப்பத்தை தணிக்க பழங்கள், பழரசங்கள் என ஆரோக்கிய உணவுகள் தீர்வாக இருந்தாலும்,  குடிமகன்களோ உடல் சூட்டை குறைக்க பீர் குடிக்கலாம் என டாஸ்மாக் கடைகளில் தஞ்சம் அடைகின்றனர். தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள், டாஸ்மாக் எலைட் பார்கள் மற்றும் தனியார் பார்களில் பீர் விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.  வழக்கமாக பிராந்தி , ரம், விஸ்கி போன்ற  மதுபானங்களை குடிப்பவர்கள்கூட  கோடையின் வெப்பம் தாங்காமல் குளிர்ச்சியான பீர் ரகங்களுக்கு மாறியுள்ளனர். கோடை வெயில் வாட்டி எடுக்கும் நிலையில், டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை 32 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும்,  நட்சத்திர விடுதிகள், மதுபான பார்களில் பீர் விற்பனை 60 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் விவரங்கள் தெரிவிக்கின்றன.  சென்னை மண்டலத்தில் மட்டும் கடந்த இரண்டு மாதங்களில் 72 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பீர் பெட்டிகள் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

ஒரு டாஸ்மாக் கடையில் இருந்து தினசரி ஆயிரத்துக்கும் அதிகமான பீர் விற்பதாக கூறுகின்றனர். கோடை வெப்பத்தை தணிக்க ஆரோக்கியான வழிகளை நாடாமல், உடலுக்கு கேடு தடும் மதுபானங்களை அருந்துவது தவறான போக்கு என எச்சரிக்கை செய்கின்றனர் மருத்துவர்கள். பீர் குடிப்பதால் சிறுநீர் அதிகமாக வெளியேறும் என்பதால் உடலின் நீர்ச் சத்து விரைவாக குறையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக உளவியல் நிபுணர்கள் கூறுகையில்,  குடிப்பழக்கத்தை தொடர கோடைக்காலம் ஒரு காரணமாக உள்ளது என்கின்றனர்.  குடிப்பதற்கு ஏதேனும் ஒரு காரணம் தேடத் தொடங்கி நாளடைவில் மதுவிற்கு அடிமையாகி விடுகின்றனர்  என்கிறார் உளவியல் நிபுணர் சுபா சார்லஸ். 

குடிக்கும் பீர் ரகங்கள் சில்லென்று இருந்தால் உடலுக்கு குளிர்ச்சி என மது பிரியர்கள் நம்பும் நிலையில் ஆல்கஹால் எந்த நிலையில் இருந்தாலும் உடலுக்கு தீங்கு என்பதே நிதர்சனமான உண்மை என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்