வாக்கு இயந்திரங்கள் உள்ள மையத்தில் சிசிடிவி கேமராக்கள் முறையாக இயங்கவில்லை : காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி புகார்
கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் சிசிடிவி கேமராக்கள் முறையாக இயங்கவில்லை என்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி புகார் தெரிவித்துள்ளார்.
கரூர் மக்களவை தொகுதி மின்னணு வாக்கு இயந்திரங்கள் கரூர் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, கண்காணிப்பு கேமராக்களில் சில முறையாக இயங்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். இரண்டு மணி நேரம் அதிகப்படியாக காண்பிக்கிறது என்றும், இது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே தேர்தலை நிறுத்துவதாக தன்னிடம் தொலைபேசியில் மிரட்டல் விடுத்த மாவட்ட தேர்தல்அலுவலர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை, அவர்களை உடனே மாற்ற வேண்டும் என்றும் ஜோதிமணி வலியுறுத்தினார்.