சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் உயர்கல்வி செலவை ஏற்குமா தமிழக அரசு?
பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு அந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
அதிக மதிப்பெண்கள் பெறக்கூடிய அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி செலவை அரசே ஏற்க கூடிய திட்டம் கடந்த ஆண்டுகளில் அமலில் இருந்தது. இதன் மூலம், மருத்துவம், பொறியியல், வேளாண்மை என பல்வேறு உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் பலர் பயன் அடைந்தனர். ஆனால், தனியார் பள்ளி மாணவர்களே அதிக மதிப்பெண்கள் பெற்று வந்ததால், இந்த திட்டத்தால், தனியார் பள்ளி மாணவர்களே அதிக அளவில் பலன் அடைந்ததாக கூறப்பட்டது. இதனால், அந்த திட்டம் ரத்தான நிலையில், அதிக மதிப்பெண்கள் பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும், ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில், உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் திட்டத்தை பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும், மீண்டும் செயல்படுத்திட வேண்டும் என பெற்றோர்களும், கல்வி ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.