தேர்தல் நாளன்று பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
தேர்தல் நாளன்று பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் ஈடுபட உள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணம் பறிமுதல் மற்றும் பல்வேறு வகையான தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை, ஆயிரத்து 576 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. சி- விஜில் என்ற மொபைல் செயலி மூலமாக ஆயிரத்து 954 புகார்கள் பெறப்பட்டு, அதில் 834 புகார்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது. வாக்குப் பதிவின் போது வாக்காளர்களின் ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் மை கர்நாடகத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும், மொத்தம் ஒரு லட்சத்து 74 லட்சம் பாட்டில்கள் வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 780 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். வாக்குப்பதிவு நாளன்று 63 ஆயிரத்து 957 போலீசார் உட்பட ஓய்வு பெற்ற போலீசார், ஊர்க்காவல் படையினர் எனமொத்தமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள் என்றும், மேலும் 160 துணை ராணுவப் படை கம்பெனிகளை சேர்ந்த, 14 ஆயிரத்து 400 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் சத்யபிரத சாகு தெரிவித்தார்.